புஜாராவை மட்டும் தேர்வுக்குழு நீக்கியது ஏன் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக  கேள்வி எழுப்பியுள்ளார்..

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக உள்ளார். அஜிங்க்யா ரஹானே மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் பேட்ஸ்மேன்கள் யாஷஷ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மூத்த பேட்ஸ்மேன் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புஜாரா ரன் அடிக்க முடியாமல் தடுமாறி வருவதால், வாய்ப்பு பறிபோனது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானேவை தவிர்த்து புஜாராவை மட்டும் தேர்வுக்குழு நீக்கியது ஏன் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா ஏன் நீக்கப்பட்டார்? நமது பேட்டிங் தோல்விக்கு அவர் ஏன் பலிகடா ஆக்கப்பட்டார்? அவர் இந்திய கிரிக்கெட்டின் நம்பகமான வீரர். ஆனால் அவருக்கு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இல்லை என்பதால் அவரை எளிதாக ஒதுக்கியுள்ளார்கள். இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்.

அவர் நீக்கப்பட்டதற்கும், அதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய மற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கும் என்ன அளவுகோல் இருந்தது? அத்தகைய தேர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இப்போதெல்லாம் தேர்வுக் குழு நேரடியாக ஊடகங்களிடம் பேசுவதில்லை. கவுண்டி தொடரில் விளையாடி வரும் அவர், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளார்.

தற்போதைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் 30 முதல் 40 வயது வரை தொடர்ந்து விளையாடலாம். ஏனென்றால் நான் வயதை வெறும் எண்ணாகவே பார்க்கிறேன். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ரஹானே தவிர மற்ற அனைவரும் பேட்டிங் செய்யத் தவறிவிட்டனர். அப்படியிருக்கையில், புஜாரா மட்டும் ஏன் நீக்கப்பட்டார் என்பதை தேர்வுக்குழு விளக்க வேண்டும்’’ என்றார்.