புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் வாயிலாக பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அந்நிறுவனம் வாயிலாக நடைபெறும் பால் விநியோகமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்களது தேவைக்கு போக மீதம் உள்ள பாலை பாண்லே நிறுவனத்துக்கு வழங்குகிறது. ஆகவே புதுச்சேரியில் அடிக்கடி பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பாக இளங்கோ நகர் பகுதியிலுள்ள பாண்லே பால் பூத் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது, புதுச்சேரியில் பீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு பால் கிடைக்கவிலை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.