பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தார். அப்போது குரூப் டி பிரிவுகளில் பாட்னாவை சேர்ந்த சிலர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து சுமார் 1.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை லாலு பிரசாத்தின் உறவினர்கள் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஒருவர் வீட்டில் சுமார் 53 லட்சம் மதிப்பிலான ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 1900 அமெரிக்க டாலர்கள் போன்றவற்றை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் இன்னும் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.