மும்பையில், மராத்தி மொழியை பேசாததற்காக இந்தி பேசும் மக்களது மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தற்போது ஒரு பெரும் அரசியல் விவாதமாக மாறி வருகிறது. குறிப்பாக, எம்என்எஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராஜ் தாக்கரேவின் அரசியல் நிதானங்கள் வலுக்கொள்ளும் நிலையில், பல்வேறு கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதாவது மராத்தி மொழி பேசாத மக்கள் மீது காதுக்கு கீழே அடியுங்கள் என ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இந்நிலையில், பாஜகவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்.பி. நிஷிகாந்த் துபே, ராஜ் தாக்கரேவை நேரடியாக சவால்விடுத்து பேசியுள்ளார்.

“நீங்கள் எங்கள் பணத்தில்தான் வாழ்கிறீர்கள்… டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்தது பீகார், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில்தான். உங்களிடம் தொழில்கள் என்ன? எங்கள் வருமானத்தில் நீங்கள் பிழைக்கிறீர்கள். எங்களிடம் சுரங்க வளங்கள் உள்ளன. ஆனால், எங்களின் மக்களை மும்பையில் அடிக்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பீகாருக்கு வாருங்கள், அங்கே என்ன நடக்கிறது என்று காணலாம்,” என எச்சரித்துள்ளார் நிஷிகாந்த் துபே. மேலும், “உங்களிடம் தைரியம் இருந்தால் உருது பேசுபவர்களையும், தெலுங்கு-தமிழ் பேசுபவர்களையும் அடித்து நொறுக்க முயலுங்கள்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மராத்தி மொழியை, சிவாஜி மகாராஜை, சத்ரபதி ஷாகுஜியை மதிக்கிறோம் என தெரிவித்துள்ள பாஜக எம்.பி., “மராத்தி மக்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு அளித்த பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக, பி.எம்.சி தேர்தலுக்காக இப்போது நடத்தப்படும் இந்த பிரிவினை அரசியல் மிகவும் ஆபத்தானது. ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் செய்திருக்கும் செயல்களை நாம் கண்டிக்கிறோம்” என கூறியுள்ளார். இது தற்போது மகாராஷ்டிரா-வட இந்தியா இடையே புதிய அரசியல் கலந்துரையாடலுக்கு வழிவகுக்கிறது.