விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது சரண்யாவின் சகோதரர் சக்கரவர்த்தி எச்சில் துப்பியுள்ளார். உடனே லட்சுமணனின் மனைவி திவ்யா தன்னை பார்த்து தான் அவர் எச்சில் துப்புவதாக நினைத்து அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரு குடும்பத்தினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தியின் தம்பி சங்கர் என்பவர் லட்சுமணனின் வலது காதை கடித்து கீழே துப்பினார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோன்று திவ்யா, சக்கரவர்த்தி, சரண்யா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.