இமவான் மகளாக இருந்தவர் தனது கணவனின் உயிரைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். கணவனைப் பிரிந்து அவரை காப்பாற்றுவதற்காக அன்னை குடி கொண்ட இடம் தான் மேல்மலையனூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றியிருக்கும் இவர் தீமையை அழிப்பதற்காக ஆக்ரோஷமான உருவம் எடுத்திருந்தாலும் அன்னை கருணையே வடிவானவர். கணவனுக்காக அங்காளம்மன் இங்கு குடி கொண்டதால் கணவனைப் பிரிந்த பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் ஒன்று சேரலாம்.

யாகத்திற்கு கணவனை அழைக்காத தந்தை தட்சன் மீது கோபம் கொண்ட தாட்சியாயினி யாக தீயில் விழுந்து தன் உயிரை விட்டார். அந்த உருவமற்ற அம்சம் தான் அங்காளி. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சிவபெருமான் அங்காளியை தன் தோளில் சுமந்து கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த சமயத்தில் அன்னையின் கை துண்டாகி கீழே விழுந்து தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதி தான் மேல்மலையனூர். இந்த கோவிலில் சாம்பல் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.