
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு பாகிஸ்தான் செல்வதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணி கண்டிப்பாக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறொரு நாட்டில் தாங்கள் மோதும் போட்டியை மட்டும் வைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததோடு அனைத்து போட்டிகளையும் தங்கள் நாட்டில் தான் நடத்துவோம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுப்பது தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விளையாட்டில் அரசியல் செய்வது நல்லது கிடையாது. மற்ற நாடுகள் இந்தியாவில் வந்து விளையாடும் போது இந்தியா மட்டும் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது. எல்லா நாடுகளும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறது. அதேபோன்று பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாட வேண்டும். பாகிஸ்தானுக்கு பிரதமர் சென்று பிரியாணி சாப்பிட்டது நல்லது என்றால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் அங்கு சென்று விளையாடுவது மற்றும் நல்லது கிடையாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.