ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக சித்ராதேவி கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் சித்ராதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வயிற்று வலி அதிகமாகி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சித்ராதேவி ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சித்ராதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரசவம் பார்த்ததால் தான் சித்ராதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் திடீரென ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.