ஜப்பான் நாட்டின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளின் அதிகாரப்பூர்வ விவரங்களை விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த முறை போல இம்முறையும் தங்கம் வெல்லும் குறிக்கோளுடன் இந்திய அணிகள் களமிறங்குகின்றன.

பிசிசிஐ-ன் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்  கிரிக்கெட் இயக்குநர் விவிஎஸ் லட்சுமண் இந்திய ஆண்கள் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். இவருக்கு உதவியாளர்களாக சுனில் ஜோஷி, ரிஷிகேஷ் கானேத்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் லட்சுமண் தலைமையில்தான் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணிக்கு அமோல் முஜும்தார் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவருடன் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆவிஷ்கார் சல்வி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் முனிஷ் பாலி ஆகியோர் உடனிருக்கிறார்கள். இதற்கிடையே, இந்தியாவின் வழக்கமான தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மூத்த அணியுடன் இருக்க உள்ளார்.

டி20 தொடரின் தங்கம் வென்ற பட்டத்தை தற்காத்துக் கொள்ளும் இந்திய ஆண்கள் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 28 அன்று களமிறங்குகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக தலைமை  தாங்குகிறார். மகளிர் அணி தனது காலிறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

மேலும் ஆசிய போட்டிக்கான அணிகள் விவரம்;

இந்திய ஆண்கள் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி.

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷபாலி வர்மா, பிரதிகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், குணலன் கமாலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டில், ராதா யாதவ், நந்தனி சர்மா.