பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் வழிகாட்டுதலுடன் கையெழுத்திடப்பட்ட  சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக எல்லை பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை கண்டித்தும், அந்த நாடு தன்னுடைய பயங்கரவாத ஆதரவை முழுமையாக கைவிடாத வரை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா எடுத்துள்ள இந்த முடிவால் பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டுவந்து கொண்டிருப்பதாக பெ ங்களூரு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் கூறியுள்ளார். சமூக ஊடகம் X-இல்அவர் வெளியிட்ட செயற்கைகோள் படங்களில், சியால்கோட் அருகே செனாப் நதியில் நீர்மட்டம் கடுமையாக குறைந்திருப்பது காட்டப்பட்டுள்ளது. “இந்தியா சிந்து நதிநீர்  ஒப்பந்தத்தை நிறுத்தியதால், பாகிஸ்தானில் செனாப் நதி வறக்குது. பானி சாஹியே பானி?” என்று அவர் எழுதிய பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா கிழக்கு நதிகளான பீஸ், ரவி, சட்லெஜ் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. பாகிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகிய நதிகளில் நீர் பெறும் உரிமை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, இந்த ஒப்பந்தம் மாநில மக்களுக்கு நஷ்டம் விளைவித்துள்ளதாக கூறியதுடன், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், இது நெடுங்காலமாகவே தேவைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.