தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் பலரும் அது தொடர்பாக தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம் நடிகர் விஜய் முதல் மாநாட்டில் பேசியது குறித்து தன் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, விஜய் புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

அவர் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில் முதல் கோட்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகளை கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் பாசிசம் என்றால் நீங்க என்ன பாயாசமா என்று விஜய் பேசிய வசனங்கள் சினிமாவில் வருவது போல் இருக்கிறது. மேலும் இந்த சினிமா வசனங்களை எல்லாம் கொள்கையாக மாற்றி விடாதீர்கள் என்று கூறினார்.