கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக சித்தராமையா இருக்கிறார். இவர் சமீபத்தில் பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கூறிய நிலையில் அவருடைய பேட்டி பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது. இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பாகிஸ்தானில் ரோடு ஷோ நடத்தப்படும் என்றும் அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் பாஜகவினர் வறுத்தெடுத்தனர்.

அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசாங்கம் சிந்து நதிநீரை நிறுத்தியதோடு பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததோடு எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளது.

இதனால் தற்போது இருநாட்டுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சித்த ராமையா போர் வேண்டாம் என்று கூறினார். இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக மாற்றிய நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் கிரிக்கெட் போட்டியின் போது ஒருவர் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்டதால் அவரை சக போட்டியாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியது.

இந்த விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் வாழ்க என்று யார் கோஷமிட்டாலும் அது தவறுதான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது பேசுவதும் தவறு. மேலும் அது தேச துரோக குற்றம் என்று கூறினார்.