பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், மோதலைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முஸ்லிம் நாடுகளின் தூதர்களுடன் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.

வெள்ளிக்கிழமை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் தூதர்களை நேரில் சந்தித்த பிரதமர் ஷெரீஃப், “இந்தியாவுடன் மோதல் உருவாகாதபடி இந்திய அரசுக்கு அறிவுறுத்துங்கள். பாகிஸ்தான் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

பஹல்காம் தாக்குதலைப் பற்றிய சாா்பற்ற சா்வதேச விசாரணை நடக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லா விதமான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது” என கூறியதாக பாகிஸ்தான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் தொடர்ந்தும் கூறுகையில், “கடந்த 15 மாதங்களில் சவூதி உள்ளிட்ட நட்பு நாடுகளின் நிதி உதவியால் பாகிஸ்தான் பொருளாதாரம் சீராகி வருகிறது. தற்போது, எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கையாலும் அந்த வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது.

பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சகோதர நாடுகளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்தியா–பாகிஸ்தான் இடையே அமைதி வழியிலான பேச்சுவார்த்தை தொடரப்பட வேண்டும் என கத்தார், குவைத் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.