
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பற்றிய கேள்விகள் மத்தியில், கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கான் வெளியிட்ட அதிரடியான கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பாகிஸ்தானுக்கு எதிராக தற்கொலை குண்டுதாரியாகச் செல்லத் தயாராக உள்ளேன். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி அளிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “நான் இதை ஒரு நகைச்சுவையாகவோ, பேச்சுத்தொகுப்பாகவோ சொல்லவில்லை; எனது உயிரை நாட்டிற்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்ற அவர், பாகிஸ்தானின் இரட்டை நயவஞ்சகமும் பயங்கரவாத ஆதரவும் அழிக்கப்பட வேண்டியவை என்றும் வலியுறுத்தினார்.
இதே நிலையில், அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ள இந்த பேச்சு, தேசியவாத உணர்வை வெளிப்படுத்துவதாகவும், மக்கள் வரவேற்பு அளிக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.