ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஓப்பனராக இருந்த டேவிட் வார்னர், தற்போது பாகிஸ்தான் பிரீமியர் லீக் (PSL) 2025 தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றுகிறார். ஐபிஎல் 2025 ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை என்பதால், பல ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக விளையாடிய அவர், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் தவிர்க்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் தனது கவனத்தை பிஎஸ்எல் தொடருக்கு திருப்பியுள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய ரசிகர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வார்னர், “இந்திய ரசிகர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுவதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் எப்போதும் எனது ஆட்டத்தையும், என்னையும் அன்புடன் ஆதரித்துள்ளார்கள்,” என்றார். மேலும், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளதால் தான் பிஎஸ்எல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், தனது தலைமையில் கராச்சி கிங்ஸ் அணியை கோப்பை வெற்றிக்குத் தூண்டும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.