பாகிஸ்தானில் சட்ட விதிமுறைகளை மீறி வீடுகளில் மற்றும் பண்ணைகளில் சிங்கங்கள், புலிகள் போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் வளர்க்கப்படுவதாக வெளியாகிய தகவல் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த லாஹோர் நகரத்தில் சமீபத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பி ஓடி, தெருவில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதன் பின்னணியில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சட்டப்படி ஒவ்வொரு மிருகத்திற்கும் 50,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும், பலரும் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மிருகங்களை வளர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 38 இனப்பெருக்க மையங்களில் சோதனை நடத்தப்பட்டு, 18 சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தங்களது அந்தஸ்தையும் கௌரவத்தையும் காட்டும் வகையில் பாகிஸ்தானியர்கள், காட்டில் வாழும் விலங்குகளை வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்ப்பதை பழக்கமாக்கி வருகின்றனர். தற்போது பஞ்சாப் மாகாணத்திலேயே மட்டும் 584 சிங்கங்கள் மற்றும் புலிகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பரிதாப நிலைமைக்கு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.