தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுவட்டம் முதல் மண்டலம் வரையான தடகளப் போட்டிகளும் பெரும்பாலான குழு போட்டிகளும் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர் மற்றும் கல்லுப்பட்டி உட்பட பல கிராம பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் தொலைதூரம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பள்ளி செல்வதற்கு மட்டுமல்லாமல் இது போன்ற விளையாட்டுகளுக்கு உள்ளூரில் எங்கு வேண்டுமானாலும் ஆசிரியருடன் சென்று வருவதற்கு மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.