பரபரப்பான கடைசி கட்டத்தில் 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் வெற்றிக்கு உதவினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டம் எந்த இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாதது. அஸ்வின் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் (1 பந்து 2 ரன்கள்) கிரீஸுக்கு வந்து வைட் பந்தை அடிக்காமல், கடைசி பந்தை பவுண்டரிக்கு அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அஸ்வினால் ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. அதேபோல தான்  மற்றொரு இன்னிங்ஸ், குஜராத்திற்கு எதிரான ராஜஸ்தானின் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார்.

போட்டியின் முக்கியமான கட்டத்தில் அஸ்வின் கிரீசுக்கு வந்தார். போட்டியில், ஷமியின் 19வது ஓவரில் துருவ் ஜூரல் விக்கெட்டை இழந்தார். அப்போது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கிரீஸுக்கு வந்த அஷ்வின் முதல் பந்திலேயே  அதிரடியாக பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் முகமது ஷமியின் பந்தை அஷ்வின் அதிரடியாக சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் இரண்டே பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் அஷ்வின். இதனால் குஜராத் கேப்டன் பாண்டியா என்ன பந்து இது என்பது போல கையை விரித்து சிரித்தார்.

19வது ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தாலும், அஷ்வின் இன்னிங்ஸ் ராஜஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெவிலியனுக்குள் நுழைந்தார். அப்போது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரில் ஹெட் மேயர் சிக்ஸர் அடித்து அவுட் ஆகாமல் போட்டியை முடித்தார். அஸ்வினின் அச்சமற்ற இன்னிங்ஸ்தான்  ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

போட்டியில் அஸ்வினால் பெரிய அளவில் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் அஸ்வின் இந்த முக்கியமான பேட்டிங் செயல்பாட்டின் மூலம் மற்ற அனைத்தையும் மறக்கடிக்க செய்து விட்டார். அஸ்வினின் ஆட்டம் அகமதாபாத்தில் அவர் எப்போதும் மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்தது.

இப்போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 46 ரன்களும், கில் 45 ரன்களும் எடுத்தனர். மேலும் ஹர்திக் பாண்டியா 28 ரன்களும், அபினவ் மனோஹர் 27 ரன்களும் எடுத்தனர்.

பின் ஆடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான பட்லர் 0, ஜெய்ஸ்வால் 1, என அவுட் ஆனதால் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின் சாம்சன் மற்றும் ஹெட் மேயர் சிறப்பாக அதிரடியாக ஆடி வெற்றிக்கு உதவினர். கேப்டன் சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்களும், ஹெட் மேயர் 26 பந்துகளில் 56* ரன்களும் எடுத்தனர். மேலும் படிக்கல் 26 ரன்களும், ஜுரல் 18 ரன்களும் எடுத்தனர்.