
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உள்துறை மந்திரியை சந்தித்து முறையிடவே சென்றதாக கூறினார்.
அதன் பிறகு தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று இபிஎஸ் கூறவில்லை. இதன் காரணமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணியில் இருந்த நிலையில் கூட்டணி விரிசலுக்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்ததால் தான் கோபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். தற்போது தமிழக பாஜக கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அண்ணாமலையை மாற்றலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை டெல்லிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பியுள்ளார். மேலும் அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்திக்க இருப்பதால் அதிமுக பாஜக கூட்டணி அமையுமா இல்லை அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவாரா என பல்வேறு கேள்விகள் தமிழக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகியுள்ளது.