
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார். அதாவது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டோ கட்சி என்று விமர்சித்ததுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறியவர்கள் இன்று எங்களுடன் கூட்டணி அமைக்க தவம் இருப்பதாக கூறினார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக தலைவர்களிடம் கேட்டபோது அண்ணாமலை எங்களைப் பற்றி சொல்லவில்லை என்று மழுப்பலாக பதில் கூறினர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்த கேள்விக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று அண்ணாமலையும் அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் கிட்டத்தட்ட மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அண்ணாமலை சொன்னது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அண்ணாமலை தங்களிடம் இருக்கும் அமலாக்க துறையை காட்டி அதிமுகவை அடிபணிய வைத்து விட்டார்கள். அவருடைய பேச்சே ஆணவமாக இருக்கிறது. மேலும் அண்ணாமலையின் பேச்சை கேட்கும் போதே தெரிகிறது அதிமுக அடிபணிந்து விட்டார்கள் என்று என்று கூறினார்.