திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர்–காயல்பட்டினம் சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி எதிரே உள்ள கடற்கரைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சிலர் ஏற்றி வந்த ஆட்டோவில் இருந்து பீடி இலை மூட்டை சாக்குகளை இறக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓடினர். லோடு ஆட்டோ டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த 44 வயதான தர்மராஜ்,என்பது தெரியவந்தது. மேலும் மதுரையை சேர்ந்த துளசி இம்மான் என்பவரின் உதவியால் படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து  தர்மராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனிலிருந்து தலா 30 கிலோ எடைகொண்ட 44 சாக்கு மூட்டைகளிலிருந்த 1,320 கிலோ பீடி இலைகளையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம். கைது செய்யப்பட்ட தர்மராஜ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் பீடி இலை மூட்டைகளை போலீசார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.