ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் (Jamshedpur) பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஅழுத்தத்தில் சிக்கிய ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்கோரா (Sidgora) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்த சஞ்சீவ் குமார் (25) என்பவர் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தார். அவருக்கு ஒரு மூத்த சகோதரன் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். சமீப காலமாக, பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்திருந்த அவர், பங்கு விலைகள் சரிந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குமார் அறையை பலமுறை கதவைத் தட்டியும் பதில் இல்லை என்பதால், அவரது குடும்பத்தினர் அறைக்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது, அவர் கூரையில் தொங்கிய நிலையில் உயிரற்ற நிலையில் இருப்பதை கண்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால், சமீப காலமாக பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர், இது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அண்மையில், இளைஞர்கள் பங்குச் சந்தை முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபட, அருகிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர்களிடம் பேசுவதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.