உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் அஜய்ப்பூர் கிராமம், பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகள் மேடையிலேயே மாலை மாற்றி வைத்த பின் காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூர்வா பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமணத்தில், மணமகன் ஊர்வலத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சடங்குகளை நிறைவு செய்தனர். அதன் பின், வழக்கம்போல் மணமக்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட அறைகளுக்கு சென்றனர்.
அடுத்து நடைபெற இருந்த நிகழ்வுக்காக மணமகளை அழைக்கச் சென்ற பெற்றோர், அவர் அறையில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேடுதல் நடத்தப்பட்டபோது, மணமகள் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஓடியது தெரியவந்தது.
உடனே மணமகளின் தந்தை அந்த இளைஞரை மொபைலில் தொடர்புகொண்டார். அப்போது நேரடியாக போனில் பேசிச் சமாதானப்படுத்த முயன்ற தந்தைக்கு, மணமகளே “நான் காதலனையே திருமணம் செய்ய விரும்பினேன்; அவருடனே வாழப் போகிறேன்” என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் இரு குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மணமகளின் தந்தை பூர்வா காவல் நிலையத்தில் அந்த இளைஞர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
