டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக கடந்த 1964-ம் வருடம் முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆக நேரு நினைவு சொசைட்டியானது இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்கே முன்னாள் பிரதமர் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சுதந்திர போராட்டங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது அந்த நேரு நினைவு சொசைட்டியின் தலைவராக இருந்து வருபவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அதோடு அதில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என 29 பேர் உள்ளனர். இந்நிலையில் இந்த சொசைட்டியின் பெயரை மாற்ற உள்ளதாக 2022ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு தெரிவித்தது.

இப்போது நேரு பெயர் நீக்கம் செய்யப்பட்டு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் சொசைட்டி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புது மாற்றத்தை தொடர்ந்து அருங்காட்சியத்தில் 14 முன்னாள் பிரதமர்களின் நினைவுகள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.