அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி கூறிய அந்த கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்னும் 6 மாதக்காலம் ஓ பன்னீர்செல்வம் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறினார். சமீபத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்று சேர்ந்தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிட்டும்.

தற்போது அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் கட்சியை விட்டு விலகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவு பட்ட நிலையில் பல முக்கிய தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். பிளவு பட்டு கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பலரும் கூறும் நிலையில் தற்போது பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயத்தில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியில் இணைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவதால் இது பற்றிய அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது