
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு வழக்கு தொடர்புடைய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளி ராஜ்குமார் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை நீதிபதி நஜ்மா கான் பிறப்பித்திருந்த நிலையில், அந்த சம்மனை குற்றவாளிக்கு வழங்கும் பணியை காவல்துறை துணை ஆய்வாளர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றவாளியின் பெயரை தவிர்த்து, தவறுதலாக நீதிபதி நஜ்மா கானின் பெயரையே குற்றவாளியின் பெயராக எண்ணிய பன்வாரிலால், அவரை தேடி நகரம் முழுவதும் சுற்றியுள்ளார்.
பலமுறை தேடியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நீதிமன்றத்தில் மீண்டும் உத்தரவு பெற பத்திரம் சமர்ப்பித்தபோது, அதில் நஜ்மா கான் என்ற பெயர் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்த நீதிபதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த தவறை உணர்ந்த நீதிபதி, சம்பவத்தின் பின்னணியை சுட்டிக்காட்டி, காவல்துறை துணை ஆய்வாளர் பன்வாரிலால் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஏற்பட்ட இந்த தவறான சம்பவம் ஊடகங்களில் வெளியானதும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு போலீசாரின் கவனக்குறைவால், நீதிமன்ற உத்தரவு எவ்வளவு தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.