மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில் சுமார் 4.9 ஏக்கர் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழை நீர் வடிகால்கள் கட்டுவதற்காக சென்னை மாநகராட்சியில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.699 கோடி மதிப்பில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் 161 கிலோமீட்டர் நீளத்திற்கான மழை நீர் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

அதனால் சென்னை மழை நீரால் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது 48 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை மாநகராட்சி சார்பில் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு படகு மழையை தொடர்ந்து சென்னையில் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களுக்குள் அதற்கான பணிகள் முடிவடைகிறது. மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஸ் அமைச்சகத்தில் இருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்திற்கு சட்டத்துறை பதில் அனுப்பும் முயற்சியை எடுத்து வருகிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஸ் அமைச்சகத்திற்கு பதில் அனுப்பப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.