உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு தினம் தோறும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலர் தங்கள் நோய் சரியாக வேண்டும் என்று அங்கேயே தங்கி  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படியான சூழலில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் போலீசார் வாகனத்துடன் சென்றுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்ற மருத்துவர் அங்கே பணியாற்றும் சக பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி சதீஷ்குமார் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இதனை கண்டித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவரை கைது செய்ய மருத்துவமனைக்கு வந்த போலீசார் வாகனத்தை வெளியே நிறுத்தாமல் வளாகத்திற்குள் வாகனத்துடன் நுழைந்தனர். போலீசார் வாகனம் வருவதால் பொது வார்டில் இருந்த நோயாளிகளின் படுக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டது. போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.