ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்க்கர் மாவட்டம் கங்கிரார் பகுதியில் தினேஷ் சிலாவத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்னி என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜ்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் தினேஷ் தனது மனைவியை ரிக்ஷாவில் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மயக்கவில் நிபுணர் இல்லாததால் சிசேரியன் பிரசவம் செய்ய முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தினேஷ் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊழியர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் தினேஷ் தனது மனைவியை உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார்.

அப்போது ரிக்ஷாவிலேயே ராஜ்னிக்கு குழந்தை பிறந்து விட்டது. முன்னதாக நல்ல மனம் படைத்தவர்கள் பிரசவம் நடக்கும் போது துணிகளை கொடுத்து உதவினர். இதனை அடுத்து தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப்போது தாயும் சேயும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

இது பற்றி மகப்பேறுத்துறை தலைவர் டாக்டர் கூறும் போது மயக்க மருந்து நிபுணர் விடுப்பில் இருந்ததால் சிசேரியன் பிரசவம் செய்ய முடியவில்லை. வழக்கமான பணிக்கு கூட போதிய மருத்துவர்கள் இல்லை. ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு கடுமையான நோயாளிகளை சேர்க்க முடியாது என கூறியுள்ளார். தினேஷின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.