
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது நிறுவனம் திறக்காததால் இருவரும் சேர்ந்து நிறுவனத்திற்கு பூட்டு போட்டு பூட்டினர்.
சில மணி நேரத்திற்கு பின்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வந்தபோது ஏற்கனவே அவர்கள் பூட்டி இருந்த பூட்டின் மேல் மற்றுமொரு பூட்டை வைத்து பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். இதுகுறித்து நிறுவன ஊழியர்கள் சதீஷ் பாஸ்கரிடம் கேட்டபோது நான் இந்த ஏலசீட்டு நிறுவனத்தில் மூன்று லட்சம் பணம் செலுத்தி சீட்டு கட்டி முடித்துள்ளேன். ஆனால் இதுவரை எனது பணத்தை கொடுக்காமல் ஏலசீட்டு நிறுவனம் அலைக்கழித்து வருகின்றனர்.
அதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார். இவருடன் சேர்ந்து சதீஷ்குமாரும் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கட்டியிருந்ததாகவும் அவருக்கும் பணம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஏலசீட்டு நிறுவனத்திற்கு பூட்டு போட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியதாலே போலீசார் முன்னிலையில் வைத்து ஏலசீட்டு நிர்வாகத்தினர் என்னிடம் 2 லட்சம் கொடுத்ததனர். மீதமுள்ள 85 ஆயிரம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் தந்து விடுவதாக எழுதிக் கொடுத்தனர்.
ஆனால் இப்போது வரை மீதி தொகையை தராததால் இதற்கு முன்பு போராட்டம் நடத்தியது போல இப்போதும் போராட்டம் நடத்த போவதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்குள் இருவருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாக ஏழசீட்டு உரிமையாளர் உறுதி அளித்தார். அதன் பின்பே இருவரும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.