ஐபிஎல் 2025 தொடரில் பிளேஆஃப் சுற்றுக்காக கடும் போட்டி நடந்து வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நம்பிக்கை வீரரான நிக்கோலஸ் பூரான், தனது அதிரடியான ஆட்டத்தால் அணிக்கு முக்கிய வெற்றிகளை வழங்கி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் 378 ரன்கள் குவித்துள்ள பூரன், ஆரஞ்சு தொப்பி பட்டியலில் இரண்டாவது இடத்தில் திகழ்கிறார். குஜராத்துக்கு எதிரான அண்மைய போட்டியில், அவர் 61 ரன்கள் அடித்து 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

அந்தச் சிக்ஸர்களில் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தலையில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நபர் நபீல் என்பவர் என்பது தெரியவந்தது. சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், பூரன் தனது அணியின் உதவியுடன் அந்த ரசிகரை மைதானத்திற்கு வரவழைத்து, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், தன் கையொப்பமிடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கி அவருக்கு ஆறுதல் கூறினார்.

 

இந்த நெகிழ்ச்சியான தருணம் பற்றிய வீடியோவை லக்னோ அணி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அந்த ரசிகர் கூறியதாவது, “பூரன் சார் என்னை நேரில் அழைத்துப் பார்த்தது என் வாழ்க்கையின் சிறந்த தருணம். இன்னும் பூரன் அதிக சிக்ஸர்கள் அடித்து, லக்னோ வெற்றிபெற வேண்டும். என் காயத்தை விட நம்முடைய வெற்றி தான் முக்கியம்!” எனக் கூறியுள்ளார். இச்சம்பவம், விராட் கோலி மற்றும் டோனி போல் பூரனும் ரசிகர்களிடம் உள்ள தொடர்பை உணர்த்தும் வகையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.