
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாதிரி பயிற்சிகளை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலையில், குடிமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் போது, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்படும், பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பு அகழிகளை பராமரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முக்கியமான ஆலைகள், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளின் பாதுகாப்பு, மின்தடை ஏற்படும் சூழ்நிலைகளுக்கான முன்னெச்சரிக்கைகள், கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாடுகள், விமானப்படையுடன் இணைக்கப்பட்ட ஹாட்லைன் வசதிகள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சிக்குறிப்புகளாக உள்ளன.
மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட உள்துறை கடிதத்தில் இந்தப் பயிற்சி கிராம அளவிலும் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு பயிற்சியில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, காவல் துறையினர், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தேசிய சேவைத் திட்டம் (NSS), தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC), நேரு யுவ கேந்திர சங்கம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பங்கேற்க உள்ளனர்.