தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது.

இதன் மூலமாக பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும் விண்ணப்ப படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2022-23 கல்வி ஆண்தில் 2,40,460 மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில் உள்ள நான் முதல்வன் தொழில் பிரிவுகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களை அடையாளம் கண்டு உயர்வுக்கு படி என்ற முன்முயற்சி இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நான் முதல்வன் “உயர்வுக்குப் படி” திட்டம் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டது.

இதற்கு மிகப்பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைத்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,884 பேர், பொறியியல் கல்லூரிகளில் 2,144 பேர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,461 பேர், ஐடிஐயில் 1,876 பேர் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளில் 2,348 பேர் என மொத்தம் 15,713 மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதி செய்யப்பட்டுள்ளது.