நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் முக்கிய அம்சமாக புதிய வரிவிதிப்பு முறையின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாத சம்பளம் பெறுபவர்களுக்கு நல்ல பலனை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் குறைவான வரி விதிப்பு அரசில் நம்பிக்கை கொண்டவன். அதனால் எந்த ஒரு வரி குறைப்பும் வரவேற்கத்தக்கது. மக்கள் கையில் அதிக பணம் கொடுப்பது என்பது பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்வதற்கான சிறந்த வழியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.