2024 டி20 உலகக் கோப்பை அணியில் கோலியும், ரோஹித்தும் இடம் பெற வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏ.பி. டி வில்லியர்ஸ் நினைக்கிறார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் கவனம் இப்போது அடுத்த பெரிய போட்டியின் மீது உள்ளது. டி20 உலகக் கோப்பை 2024க்கு தற்போது அணி தயாராகி வருகிறது. ஆனால் டி20 அணியில் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் இடம் பெறுவார்களா? இல்லையா என்பது தான் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம். இரு வீரர்களும் தாங்களாகவே முடிவெடுக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் 2 வீரர்களும் அணியில் இருக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் இதையே நம்புகிறார். டி20 உலகக் கோப்பை அணியில் கோலியும், ரோஹித்தும் இடம் பெற வேண்டும் என ஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் மூத்த வீரர்களை சேர்ப்பது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது: டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அதனால் ரோஹித்தும், விராட்டும் இதில் இடம் பெறக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பையில் உங்களுக்கு அனுபவம் தேவை, இந்த இருவரையும் விட சிறந்த அனுபவம் வேறு யாரிடமும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

மேலும் ஏபி டி கூறுகையில், உலக கோப்பையில் டாப் ஆர்டரில் ரோஹித் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விரும்புவது இதுதான். மிடில் ஆர்டரில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிகவும் முக்கியமானவர் என்று கூறினார். டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, ஏபி டி வில்லியர்ஸ், “ரோஹித்தும், கோலியும் என்ன உணர்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது என்று கூறினார்.  “உலகக் கோப்பையை இழந்த பிறகு ரோஹித் மற்றும் கோலி என்ன உணர்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த உணர்வை நானும் கடந்து வந்திருக்கிறேன். 2015 உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோற்றோம். நான் அதிலிருந்து மீண்டுவிட்டேனா இல்லையா என்பது இன்னும் எனக்குத் தெரியவில்லை. இது கிட்டத்தட்ட நீங்கள் கோப்பையை உணர்ந்தது போல இருந்தது, ஆனால் அது உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எனவே, அந்தத் தோல்வியிலிருந்து விரைவாக மீள்வது கடினம்” என்று கூறினார்.