தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது அதன் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று மாலை 5.30 மணிக்கு அது பெங்கல் புயலாக உருவாகிறது. இந்த நிலையில் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கூறியதாவது, மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன உடனே முதலமைச்சர் என்னை உடனே நாகப்பட்டினத்திற்கு போ என கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்போது மழை இல்லை. ரெட் அலர்ட் படிப்படியாக குறைந்து நாளை, நாளை மறுநாள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். மக்கள் தங்குவதற்கு இடம், தேவையான உணவு ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளோம். இதுவரை மழை வெள்ள பாதிப்பு குறித்து பெரிதாக புகார் எதுவும் வரவில்லை. அனைவரும் தயார் நிலையில் உள்ளோம் என கூறியுள்ளார்.