இந்திய ரயில்களில் பொதுப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளின் உரிமை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டும் வகையிலான நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பெண் பயணி ஒருவர் தனக்காக முன்பதிவு செய்யப்பட்ட (Reserved) இருக்கையில் அமர்வதற்காக ரயிலில் ஏறியபோது, அவரது சீட்டில் முற்றிலும் சம்பந்தமில்லாத வேறு சிலர் அத்துமீறி அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

​இது குறித்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரியிடம் அந்தப் பெண், “இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி, இதில் ஏன் சம்பந்தமில்லாத நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள்? அவர்களை ஏன் நீங்கள் இங்கிருந்து அகற்றவில்லை?” என்று மிக நியாயமாகத் தனது உரிமைக் குரலை எழுப்பியுள்ளார்.

​ஆனால், அதற்குப் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டிய அந்த ஆர்பிஎஃப் அதிகாரி கொஞ்சமும் பொறுப்பில்லாமல், “எங்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது, நீ போய் டிடிஇ (TTE)-கிட்ட பேசிக்கோ” என்று மிக அலட்சியமாகவும் கோபமாகவும் பதிலளித்துத் தனது கடமையிலிருந்து நழுவியுள்ளார். காவல் துறையினரின் இந்த அராஜகப் பதில் அந்தப் பெண்ணுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், ரயில்வேயின் அவசர உதவிப் புகார்ப் பிரிவான ‘ரெயில் மதத்’ (Rail Madad) செயலி மூலமாக அடுத்தடுத்து இரண்டு முறை இந்த விபரீதம் குறித்துப் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த இரண்டு புகார்களுமே எந்தவொரு தீர்வும் காணப்படாமல், அதிகாரிகளால் அப்படியே மூடி மறைக்கப்பட்டுள்ளன.

காசு கொடுத்து டிக்கெட் எடுத்தும் ரயிலில் தனக்கு நேர்ந்த அநீதிக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று அந்தப் பெண் கதறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தப் பயணிகள் மத்தியிலும், நெட்டிசன்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.