தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ள நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ள நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் சீமான் பேசியதாவது, கட்சி ஆரம்பிக்கப் போறாரு தம்பி விஜய் அப்படிங்கிறது தெரிஞ்ச செய்தி தான். இப்போது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். அது நல்ல பேராக உள்ளது.. ‘தமிழக வெற்றி கழகம்’ என்பது.. எங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்னன்னா திராவிடம் என்கிற அந்த பேரே இல்லாதது பெரிய மகிழ்ச்சி தான்.. பெரிய வெற்றி தான்.. நல்ல பெயர் தான். தமிழக வெற்றி கழகம் என்பது நல்ல பெயர். நான் வாழ்த்துகிறேன். என் தம்பிக்கு வாழ்த்து, அவர் கூட இருக்கின்ற தொண்டர்களுக்கு அன்பும், வாழ்த்துக்களும்..

அது எனக்கு முன்னாடியே தெரியும்.. தம்பி 26 ல (2026) தான் போட்டியிடுவார்.. பாராளுமன்றம் வந்து ஒரு மாநில கட்சி தொடங்கும் போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது சரியா இருக்காது. அதற்கு சான்று அண்ணன் கமல், தினகரன் போன்றவர்கள் எல்லாம். அது இருக்க முடியாது. ஒரு மாநில கட்சி, மாநிலத்தின் நலன், மாநில பிரச்சனை, அதை முன்வைத்து தொடங்கும் போது அங்கிருக்கின்ற தேர்தலை தான் முதன்மையாக கவனம் செய்ய வேண்டும்.. அதனால் தான் 26 இல் தான் வருவார்.. ஒரு ஆண்டு.. ஒன்றரை ஆண்டுகள் களப்பணிக்கு எடுத்துக் கொள்கிறார்.

நாங்கள் எல்லாம் 5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டோம். முன் தயாரிப்பு இருந்தது.. கட்டமைப்பது.. புதிதாக வர்றவங்கள நம்ம நோக்கம் என்ன, அரசியல், என்ன எந்த மாதிரியான அரசியலை முன்வைத்து நகர வேண்டும்.. அதெல்லாம் பயிற்சி கொடுத்து.. தயார் பண்ணி கொண்டு போக காலம் எடுக்கும். அப்போ அதற்கு முன் தயாரிப்புக்கு ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்குறாரு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்.. முன்னாடியே எனக்குதெரிஞ்சது தான்.. சரிதான் என்றார்..

விஜயின் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, இது வந்து இப்ப கேள்வியே நீங்க என்கிட்ட கேட்க கூடாது.. தம்பி கிட்ட தான் கேட்கணும்.. அவரே எனக்கு பின்னாடி வராரு.. நான் அவரு கோட்பாட வைத்து ரொம்ப தூரம் பயணிச்சிட்டேன்.. அவர் புதிதாக ஒரு தத்துவத்தை முன்வைக்கிறார். அவர் முன்வைக்கிற கோட்பாடும், நாங்க முன்வைத்து பயணிக்கிற கோட்பாடும் ஏற்புடையதா இருந்தா.. அவர் தான் முடிவு பண்ணனும்.. இல்ல நம்ம தனித்து நிற்கலாம் என அவர்தான் முடிவு பண்ணணும்.. அவரும், அவர் தொண்டர்கள் தான் முடிவு பண்ணனும். நாம வந்து நம்ம சேர்ந்து அப்படின்னு சொல்ல முடியாது.. அது காலம் ஒத்து வரணும்.. சூழல் அமையனும்.

அது அவர் விரும்பனும்.. அவர் தொண்டர்கள் விரும்பனும். அப்பதான் அதை பத்தி பேச முடியும்.. இப்ப  நான் சொல்றேன் தனிச்சு போட்டிடுறேன். நீண்ட தூரம் தனிச்சு போட்டியிட்டு தான் நாங்க வந்திருக்கோம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.. அதை நீங்க வந்து தம்பி கிட்ட தான் கேட்கணும் அவர் கட்சி ஆரம்பித்து அவர் வந்து பேசும்போது, அவர்கிட்ட கேளுங்க.. நீங்க தனிச்சு போட்டியிடுவீங்களா? கூட்டணி வைப்பீங்களா? நீங்க அண்ணனோட சேர்ந்து நிப்பீங்களான்னு கேளுங்க.. என்கிட்ட கேட்டுகிட்டு இருக்கீங்க.. நான் என்ன பதில் சொல்றது.. 24 (2024) தேர்தலில் நான் தனிச்சு போட்டியிடுறேன். வேட்பாளர் அறிவித்துக் கொண்டு வருகிறேன். அதுதான் உண்மை அதுதான் நடக்க போகுது” என தெரிவித்தார்.