சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் யார் அந்த சார் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால் அரசும் போலீசும் மாணவியை பயமுறுத்த அந்த சமயத்தில் ஞானசேகரன் அப்படி போனில் பேசி நாடகமாடியதாகவும் அவருடைய போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததாகவும் அதனால் சார் என்ற ஒருவர் கிடையாது என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதன் பிறகு தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நியாயம் கிடைக்க போராட அழைப்பு விடுத்துள்ளார். அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை பாராட்டியும் உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் திரு.விஜய் அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று மற்றோரு பதிவில்,

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.

கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத அவல ஆட்சி தான் திரவிட மாடல்.