கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆனால் காட்டு யானை சுரேஷை மட்டும்  விடாது துரத்தியது. பின்பு காட்டு யானை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த வனத்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷின் தலை மற்றும் இடுப்பில் உள்ள எலும்பு முறிந்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.