இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரருமான யுஸ்வேந்திர சஹால், காரை ஓட்டிச் செல்லும்போது சிகரெட் பிடித்து அதனை சாலையில் வீசிச் சென்றதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், சஹால் காரை ஓட்டிச் செல்கிறார். அப்போது அவர் சிகரெட் ஒன்றை புகைப்பதும், பின்னர் அதனை அலட்சியமாக நடுரோட்டிலேயே வீசிவிட்டு காரை வேகமாக ஓட்டிச் செல்வதும் பதிவாகியுள்ளது. அருகில் மற்றொரு நபர் அமர்ந்துள்ளார், ஆனால் அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. மற்றுமொரு வாகனத்தில் சென்ற நபர் ஒருவரால் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தெளிவான தகவல் இல்லை என்றாலும், இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவைக்கண்ட சமூக வலைதளப் பயனாளர்கள் சஹாலின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எவ்வளவு பணம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லை. யுஸ்வேந்திர சஹாலைப் பாருங்கள், சிகரெட் பிடித்துவிட்டு அதனைச் சாலையில் வீசுகிறார். எவ்வளவு பணம் இருந்தாலும் பொது அறிவு இல்லை என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
பிரபலங்களே இப்படி நடந்துகொண்டால், பொதுமக்களிடம் எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த நாடு அவ்வளவு எளிதில் திருந்தாது என மற்றொருவர் சாடியுள்ளார். ஒழுக்கமின்மையே அணியில் இடமில்லாதற்குக் காரணம். இவருக்கு ஏன் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. ஒழுக்கமும் கிடையாது, பொது அறிவும் கிடையாது எனச் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.
🚨 Meet Yuzvendra Chahal, caught smoking a cigarette and carelessly throwing it onto the road.
All that money and still no class, no civic sense. Disgusting pic.twitter.com/joHVrkbGPL
— Wickets Hitting (@offpacedelivery) April 10, 2026
இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க, கடந்த மாதம் தனது முன்னாள் ஆர்சிபி சக வீரர் ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலில் சஹால் அளித்த பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில் அவர், “எனக்கு இப்போது 35 வயதாகிறது. எனது உடல்நலத்தில் நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். எனவே, கடந்த ஆறு மாதங்களாக நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு மூத்த வீரராக இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கூறியிருந்தார். இப்படிப் பேசிய ஒருவரே இப்போது சிகரெட் சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சஹால், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று (சனிக்கிழமை) முல்லன்பூரில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட உள்ள நிலையில், இந்த வீடியோ சர்ச்சை கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
