மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தன்ரா தாலுகா ஜப்தலாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் குடியிருப்பு ஆசிரமப் பள்ளியில் துயரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. முன்னாள் எம்பி மரோத்ராவ் கோவாசே என்பவருடன் தொடர்புடைய இந்தத் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த சுமாா் 79 மாணவிகள், வழக்கம்போல நேற்று நள்ளிரவு தரைப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விடுதி அறைக்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்று, பல மாணவிகளைக் கடித்துக் குதறியது.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தன்ரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்குச் சிகிச்சை பலனின்றி இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிர் இழந்த நிலையில், நிலைமை மோசமாக இருந்த மற்றொரு மாணவி கட்சிரோலி மாவட்டப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவியும் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் தீபிகா லாக்டா, சுஷ்மிதா மண்டல் மற்றும் அநு கோரேட்டி ஆகிய இளம் மாணவிகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோக விபத்து குறித்துத் தகவலறிந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 மாணவிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்ட அடுத்த நாளே இந்தச் சோகம் நிகழ்ந்திருப்பது விடுதிகளின் தூய்மை, இரவு நேரப் பாதுகாப்பு மற்றும் பாம்பு தடுப்பு முறைகள் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
