சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன்  ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், பொங்கல் போட்டியில் உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கும் தனது படத்திற்கும் இடையிலான மோதல் குறித்து விரிவாகப் பேசினார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ஆரம்பத்தில் ‘பராசக்தி’ படத்தை தீபாவளிக்கே வெளியிடத் தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், விஜய் அண்ணாவின் ‘ஜனநாயகன்’ படம் அக்டோபரில் வருவதாகத் தகவல் வந்ததும், அவருடன் மோத வேண்டாம் எனக்கருதி பொங்கலுக்குத் தள்ளி வைத்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக ஜனநாயகன் படமும் பொங்கலுக்கே தள்ளிப்போனது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது,” என்றார்.

தயாரிப்பாளரிடம் பேசி தேதியை மாற்ற முயன்றபோது, தேர்தல் மற்றும் முதலீட்டாளர்களின் சிக்கலால் தேதியை மாற்ற முடியாத சூழல் உருவானது. இது குறித்து சிவகார்த்திகேயன் மேலும் கூறுகையில்: “மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்ததால், விஜய் சாரின் மேலாளர் ஜெகதீஷைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் மூலமாகத் தகவல் அறிந்த விஜய் சார், ‘அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். எஸ்கே-வுக்கு (SK) என் வாழ்த்துகளைச் சொல்லிடுங்க’ என்று பெருந்தன்மையுடன் கூறினார். இதைக் கேட்டபோது தான் என் மனம் நிம்மதியடைந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“கடந்த 33 ஆண்டுகளாக விஜய் அண்ணா நம்மை மகிழ்வித்து வருகிறார். எனவே, வரும் பொங்கலுக்கு ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாடுங்கள். அடுத்த நாளான ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படத்தைக் கொண்டாடுங்கள். யார் என்ன பேசினாலும், இந்தப் பொங்கல் ‘அண்ணன் – தம்பி’ பொங்கல் தான்!” என்று சிவகார்த்திகேயன் பேசியபோது அரங்கம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.

மேலும் சினிமா ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து காத்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை ஜி தமிழ் தொலைக்காட்சியிலும், ‘பராசக்தி’ படத்தின் விழா சன் டிவியிலும் ஒளிபரப்பப்பட உள்ளன. ஒரே நேரத்தில் இரு பெரிய நட்சத்திரங்களின் பட விழாக்கள் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.