புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தமிழக பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வரும் நோக்கத்தில் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே புதுச்சேரியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை விரிவுபடுத்தும் விதமாக வருகின்ற கல்வியாண்டு முதல் 1 முதல் 9, மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்ட அமலாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதில் விருப்ப பாடமாக தமிழ் மொழி பாடம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.