விநாயகர் கோவிலில் தேங்காயை சிதறு காயாக உடைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இதற்கான காரணம் அறிந்தவர்கள் சிலரே. விநாயகப் பெருமான் மகோற்கடர் அவதாரம் எடுத்திருந்தபோது காசிப முனிவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் விநாயகர் ஒரு யாகத்திற்கு புறப்பட்ட நேரம் அசுரன் ஒருவன் தடுத்து நிறுத்தியுள்ளான். அப்போது விநாயகர் யாகத்திற்காக தான் எடுத்துச் செல்ல வைத்திருந்த தேங்காய்களை அந்த அசுரனின் மீது வீசி எரிந்து அவனை பொடி பொடியாக்கினார்.

எந்த செயலை தொடங்கும் போதும் விநாயகரை வணங்குவது வழக்கம். அந்த விநாயகருக்கே தொடக்கத்தில் ஏற்பட்ட தடையை தேங்காயை சிதறுகாய் ஆக்கி தான் தகர்த்தெறிந்தார் என்பது புராணக்கதை. இதன் அடிப்படையில் விநாயகருக்கு விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் உருவானது. அவ்வாறு விநாயகர் அன்று தேங்காயை சிதறு காயாக உடைத்ததை தான் பக்தர்கள் பலர் இன்றுவரை பின்பற்றி வருகிறார்கள்.