இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பு செய்த மூத்த நடிகர் அச்சுத் போட்டார், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை தானேயில் காலமானார்.

அவருக்கு வயது 91. சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் தானேயிலுள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 19 அன்று தானேயிலேயே நடைபெறவுள்ளது. ஒரு தனியார் சேனலின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அஞ்சலி பதிவின் மூலம் அவரது மறைவு செய்தி வெளிச்சத்துக்கு வந்தது.

திரையுலகில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அச்சுத் போட்டார், ஆக்ரோஷ், அர்த் சத்யா, தேசாப், பரிந்தா, ரங்கீலா, வாஸ்தவ், ஹம் சாத்து சாத்து ஹைன், பரினீதா உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தில் கடுமையான பேராசிரியராக அவர் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவைத் தாண்டி, பாரத் ஏக் கோஜ், பிரதான் மந்திரி, ஆஹத், வாக்லே கி துனியா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவால் பாலிவுட் மற்றும் மராத்தி சினிமா துறையில் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.