
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட கொடூரமான சம்பவம் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் இனத்தைச் சேர்ந்த விஷால் ஜாதவ் என்பவரின் திருமண ஊர்வலத்தில் சிலர் ஆயுதங்கள் மற்றும் கம்புகளுடன் வந்து தாக்குதல் நடத்தினர். ஊர்வலத்தை மடக்கி நிறுத்திய அவர்கள், மணமகன் மீது சாதிச் சொற்களை சுமத்தியதோடு, அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் மணமகனின் தந்தைக்கு தலையில்காயம் ஏற்பட்டது. மேலும் ஊர்வலத்தின் அலங்காரங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் சமூக ஊடகத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட காணொளியில், “உத்தரபிரதேசத்தில் சாதிய மிருகத்தனத்தின் இன்னொரு உருவம் இது. மிக மோசமான விஷயம் என்னவென்றால், இது போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இது அதிகாரிகள் முடங்கிய நிலையில் இருந்தார்களா, அல்லது அவர்கள் அமைதியாக ஆதரவளித்தார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது,” என்று கூறினார். இது தொடர்ந்தால், உத்தரபிரதேசத்தில் பஹுஜன்கள் சுதந்திரமாக வாழ முடியுமா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மால்புரா காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஊர்வலத்தின் போது ஒலித்த ஹாரன் தொடர்பாகவே சர்ச்சை எழுந்து இந்த மோதல் உருவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மணமகனின் குடும்பத்தினர், அவர்கள் மார்ச் 9 அன்று உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், அதை பதிவு செய்த நபரையும் மர்ம நபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.
View this post on Instagram