
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் மாணவரணி செயலாளர் எழிலரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது ஆர்.எஸ் பாரதி பேசியதாவது, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்காக தான் வந்துள்ளது. எங்களில் பலர் சாதிவாரி இட ஒதுக்கீட்டால்தான் டாக்டர் ஆகியுள்ளனர். எங்களைப் போன்றவர்கள் குலம் மற்றும் கோத்திர பெருமையால் டாக்டர் ஆகவில்லை.
எங்களுடைய பட்டப்படிப்புகள் மற்றும் டாக்டர் பட்டங்கள் போன்றவைகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நான் படிக்கும் காலத்தில் பிஏ படித்தாலே போர்டு வைத்துக்கொள்வார்கள். இப்போது நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது. எனக்கு எப்போதும் மனதில் உள்ளதை தைரியமாக பேசும் குணம் இருக்கிறது என்றார். இதில் நாய் கூட பிஏ பட்டம் வாங்கும் என்று ஆர்.எஸ் பாரதி கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர்தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது நாய் கூட பட்டம் பெறும் என்பதை உள்நோக்கமாக நான் கூறவில்லை. மேலும் இப்போது அனைவரும் படித்து பட்டம் பெறுகிறார்கள் என்பதை தான் அப்படி கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.