
மணப்பாறை அடுத்த புத்தாநத்ததில் பாஜக சார்பாக மத்திய பட்ஜெட் சாதனை விளக்கம் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராம சீனிவாசன், புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழியை தான் மத்திய அரசு படிக்க சொல்கின்றது. ஆனால் திமுக இந்தியை திணிப்பதாக பொய்யான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. திமுகவில் உள்ள பிரமுகர்கள் வீட்டு குழந்தைகள் இந்தி மொழியை சிபிஎஸ்சி பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்று மும்மொழிக் கொள்கையை திமுக அரசு எதிர்கின்றது. மொழி என்பது நம்மை இணைக்கும் ஒரு கருவி தான். நம்மை பிணைக்கும் ஒரு கருவி. இந்தப் பிணைக்கும் கருவியை பிளக்கும் கருவியாக மாற்றுவதற்கு திமுக அரசு முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்த கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. அவர்களது அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்து விட்டார்கள். அவர்கள் அனைவருமே தற்போது அறிவாலய அடிமைகளாகி விட்டனர். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் கட்டாயம் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராம சீனிவாசன் காட்டமாக பேசியுள்ளார்.