நாடாளுமன்ற மக்களவையில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் மத்திய பாஜக தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து எம்பி கனிமொழி உரையாற்றினார். அவர் சமூகநீதி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறி திராவிட மாடலின் ஆட்சியின் சிறப்புகளை தெரிவித்தார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவினர் தங்களுடைய கட்சிக் கூட்டம் என நினைத்து நாடாளுமன்றத்தில் பொய் மற்றும் அரை உண்மைகளை பரப்புவது வழக்கம். சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் திமுக எப்படி அறியப்படுகிறது.

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தில் கழிவுநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு ஒரு மாத காலமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக கட்சியின் அமைச்சர் ஒருவர் கிராம பஞ்சாயத்து‌ பிரதிநிதி ஒருவரை ஜாதியின் பெயரை கூறி அவமதித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியை ஏற்று அனுமதிக்கப்படவில்லை. டிஆர் பாலு இந்து கோவில்களை இடிப்பேன் என்று கூறினார். இதுதான் கடந்த 20 மாதங்களில் திமுகவின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. மேலும் இந்த சாதனைகளை நிரப்பும் அளவுக்கு ஒரு பத்திரிக்கையின் 20 பக்கங்கள் இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.